321
முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
முடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
புனிதஅருட் கடலாடேன் புளகம் முடேன்
பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே

322
விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே

323
மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் முழ்கிப்
பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே

324
முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
முடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
மலைஒருபால் வாங்கியசெக வண்ண மேனி
வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே

325
வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே