326
வஞ்சமட மாதரார் போகம் என்னும்
மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
காணாத செங்கனியில் கனிந்த தேனே
தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே

திருச்சிற்றம்பலம்

 முறையிட்ட பத்து
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

327
பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ

328
மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுந்தாக் கொடிய மரம்அனையேன்
துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துனைகாணேன்
செங்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தௌ;ளமுதே
முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ ஆறையேயோ

329
அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ

330
அருகா மலத்தில் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
முருகா முகம்மு விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ