336
வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ

திருச்சிற்றம்பலம்

 நெஞ்சவலங் கூறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

337
இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே

338
வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கணையேன்
மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
கஞ்சன் மால்புகழ் கருணைஅங் கடலே
கண்கள் முன்றுடைக் கரும்பொளிர் முத்தே
அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
அண்ண லேதணி காசலத் தரசே

339
மையல் நெஞ்சினேன் மதிஇயிலேன் கொடிய
வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
செய்ய மேனிஎன் சிவபிரான் அளித்த
செல்வ மேதிருத் தணிகையந் தேவே

340
மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
புண்ணி யாஅருட் போதக நாதா
துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
துஎய னேபசுந் தோகைவா கனனே