341
துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
துயர்செய் மாதர்கள் சூழலுன் தினமும்
பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
நட்டம் ஆடிய நாயகன் அளித்த
நல்ல மாணிக்க நாயக மணியே
மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
வள்ள லேமயில் வாகனத் தேவே

342
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
தாயும் தந்தையும் சாமியும் எனது
சார்பும் ஆகிய தணிகையங் குகனே
ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே

343
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
தெங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
உண்மை யேஎனக் குற்றிடும் துணையே

344
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
கடிய மாதர்தங் கருக்குழி எனும்ஓர்
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே

345
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
பித்த நாயகன் அருள்திருப் பேறே
பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
சலத்தின் மேவிய தற்பர ஒளியே