346
அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
பழுக்கும் முடருள் சேர்ந்திடுங் கொடியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே

திருச்சிற்றம்பலம்

 ஆற்றாப் புலம்பல்
கொச்சகக் கவிப்பா
திருச்சிற்றம்பலம்

347
அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவன
வண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னின்னே

348
மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ

349
காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
தூய்நின்றே நாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
போய்நின் நடைவேனோ புண்ணியநின் பொன்னருளே

350
பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே