351
வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ

திருச்சிற்றம்பலம்

 திருவருள் விழைதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

352
தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே

353
கடைப்பட் டேங்கும்இந் நாயினும் கருள்தரக் கடவுள்நீ வருவாயேல்
மடைப்பட் டோ ங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்
தடைப்பட் டாய்எனில் என்செய்வேன் என்செய்வேன் தளர்வது தவிரேனே
அடைப்பட் டோ ங்கிய வயல்திருத் தணிகையம் பதிஅமர்ந் திடுதேவே

354
தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
முவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முரகநின் பெயர்சொல்வோர்
யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே

திருச்சிற்றம்பலம்

 புண்ணியநீற்று மான்மியம்
லண்ணக் கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

355
திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்
பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும்
கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே