356
மால்ஏந்திய சூழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
வேல்ஏந்திய முருகாஎன வெண்ணீறணித் திடிலே

357
தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே

358
துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே

359
தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஓருவும்
வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
ஆறாக்கரப் பொருளேஎன அருள்நீறணிந் திடிலே

360
அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே