361
மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே

362
அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே

363
சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவே னமும்ஓர்
நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே

364
எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
கண்ணாஎம தண்ணஎனக் கனநீறணிந் திடிலே

திருச்சிற்றம்பலம்

 ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்தொவே உறுதி உணர்த்தல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

365
மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே