366
அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே

367
என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
நன்றேஎக் காலமும் வாழிய நன்னெஞ்சமே

திருச்சிற்றம்பலம்

 எண்ணத் தேங்கல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

368
போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாதுநின் திருஉளம் அறியேன்
தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
ஈவையோ துணிகைவாழ் இறையே

369
வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
சஞ்சரித் துழன்றுவெங் நரகில்
வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
வெள்பினுள் ஒளிர்அருள் விளக்கே

திருச்சிற்றம்பலம்

 கையடை முட்டற் கிரங்கல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

370
கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தௌ;அமுதே
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
ஏர்பூத்த ஒண்பளி தம் காண் கிலன்அதற் கென்செய்வனே