371
கருமருந் தாய மணிகண்ட நாகன் கண்மணியாம்
அருமருந் தேதணி காசலம் மேவுன்என் ஆருயிரே
திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே

372
பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எதற்கே

373
கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே

திருச்சிற்றம்பலம்
 பளிதம் = கர்ப்பூரம்

 அடியார்பணி அருளவேண்டல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

374
எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
அப்பாஎன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே

375
எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
செய்யாள் மருவூம் பூயனுடைத் தேவனும் சேணவனும்
நையாத ஆயூளும் செல்வமும் வண்மையூம் நண்ணினரே