396
அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
றலைந்திடும் பாவியேன் இயற்றும்
பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
பாதுகாத் தளிப்பதுன் பரமே
மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
முத்தமே முக்தியின் முதலே
கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

397
நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில்
நின்றுநின் றலைதரும் எளியேன்
தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும்
தயைஇலா திருந்தனை என்னே
பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
கொல்நிலை வேங்கைக் கொளும்திருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

398
பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
பதகர்பால் நாள்தொறும் சென்றே
வாடிநின் றேங்கும் எழையேன் நெஞ்ச
வாட்டம்இங் கறிந்திலை என்னே
ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

399
வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்ந்தாள்
துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

திருச்சிற்றம்பலம்

 கூடல் விழைதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

400
சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
சடையார் விடையார் தனிஆனார்
உகமா ருடையார் உமைஓர் புடையார்
உதவும் உரிமைத் திருமகனார்
முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
எனவே எனது முன்வந்தார்
அகமா ருடையேன் பதியா தென்றேன்
அலைவாய் என்றார் அஃதென்னே