401
விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
விதிமால் அறியா விமலனார்
மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
மகனார் குகனார் மயில்ஊர்வார்
முதுவாழ் வடையா தவமே அலைவேன்
முன்வந்த திடயான் அறியாதே
புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
நின்றேன் அந்தோ பொல்லேனே

402
காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
காடே இடமாக் கணங்கொண்ட
பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
பித்தப் பெருமான் திருமகனார்
தாயோ டுறழும் தணிகா சலனார்
தகைசேர் மயிலார் தனிவேலார்
வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
வெள்வளை கொண்டார் வினவாமே

403
பொன்னார் புயனார் புகழும் புகழார்
புலியின் அதளார் புயம்நாலார்
தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
சிவனார் அருமைத் திருமகனார்
என்நா யகனார் என்னுயிர் போல்வார்
எழின்மா மயிலார் இடையோர்கள்
தந்நா யகனார் தணிகா சலனார்
தனிவந் திவண்மால் தந்தாரே

404
கல்லால் அடியார் கல்லடி உண்டார்
கண்டார் உலகங் களைவேதம்
செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
சிவனார் அருமைத் திருமகனார்
எல்லாம் உடையார் தணிகா சலனார்
என்னா யகனார் இயல்வேலார்
நல்லார் இடைன் வெள்வளை கொடுபின்
நண்ணார் மயில்மேல் நடந்தாரே

405
காருர் சடையார் கனலார் மழுவார்
கலவார் புரமுன் றெரிசெய்தார்
ஆருர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
அரனார் அருமைத் திருமகனார்
போருர் உறைவார் தணிகா சலனார்
புதியார் எனஎன் முனம்வந்தார்
ஏருர் எமதுஎ ரினில்வா என்றார்
எளியேன் ஏமாந் திருந்தேனே