406
கண்ணார் நுதலார் விடமார் களனார்
கரமார் மழுவார் களைகண்ணார்
பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
பெரியார் கைலைப் பெருமானார்
தணிகா சலனார் தணிவேலார்
எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
என்செய் கேனோ இடர்கொண்டே

407
மழுவார் தருகைப் பெருமான் மகனார்
மயில்வா கனனார் அயில்வேலார்
தழுவார் வினையைத் தணியார் அணியார்
தணிகா சலனார் தம்பாதம்
தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
துதியா நிற்பார் அவர்நிற்கப்
புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
தருள்தந் தருளிப் போனாரே

408
திருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
நினைவார் தங்கள் நெறிக்கேற்க
அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
அறுமா முகனார் அயில்வேலார்
திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
திருமா மலையார் ஒருமாதின்
வருத்தம் பாரார் வளையும் தாரார்
வாரார் அவர்தம் மனம்என்னே

409
பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
பெயரும் பிச்சைப் பெருமானார்
திரமன் றினிலே நடனம் புரிவார்
சிவனார் மகனார் திறல்வேலார்
தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
தணிகா சலனார் தமியேன்முன்
வரமன் றவும்மால் கொளநின் றன்னால்
மடவார் அலரால் மனநொந்தே

திருச்சிற்றம்பலம்

 தரிசனை வேட்கை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

410
வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
மெய்யனை ஐயனை உலக
மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை எனது
கருத்தனை அயன்அரி அறியாச்
சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே