411
கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
காக்கவைத் திட்டவேற் கரனைப்
பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
பதியினை மதிகொள்தண் அருளாம்
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
தண்ணனை எனது கண்ணனை அவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

412
என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
என்னுடைப் பொருளினை எளியேன்
மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
மணியினை அணியினை வரத்தை
மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
மிளிர்அருள் தருவினை அடியேன்
தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

413
பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
பராபரஞ் சுடரினை எளியேற்
கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
எண்ணுதற் கரியபேர் இன்பை
உரங்கினர் வானோர்க் கொருதனி முதலை
ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
தாங்கினார் அருண கிரிக்கருள் பவனைத்
தணியையில் கண்டிறைஞ் சுவனே

414
அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
அன்பினுக் கெளிவரும் அரசை
விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
விளக்கினை அளக்கரும் பொருளைக்
கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
முனிந்திடா தருள்அருட் கடலைத்
தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

415
மாரனை எரித்தோன் மகிழ்தரு மகனை
வாகையம் புயத்தனை வடிவேல்
தீரனை அழியாச் சீரனை ஞானச்
செல்வனை வல்வினை நெஞ்சச்
சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே