416
வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
விமலனை அமலனை அற்பர்
போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
பூதனை மாதவர் புகழும்
பாதனை உமையாள் பாலனை எங்கள்
பரமனை மகிழ்விக்கும் பரனைத்
தரதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

417
குழகனை அழியாக் குமரனை அட்ட
குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதில்
சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

418
முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

419
வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
கருத்தனைக் கருதும்ஆ னந்த
வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
விருப்புறு பொருப்பனை வினையைத்
தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே

திருச்சிற்றம்பலம்

 நாள் எண்ணி வருந்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

420
இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே