421
ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
துஎறி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே

422
கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
ஊழை நீக்கிநல் அருள்தருத் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே

423
ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொனா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே

424
பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரால் விடுத்துய்யக்
கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே

425
எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
அளிய தாகிய நெஞ்சினார்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே