426
தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பொருவாழ்வே
கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே

427
வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீத்தக்
காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
துஎண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே

428
கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகமெலாம் அளிப்போனே
அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே

429
பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே

திருச்சிற்றம்பலம்

 ஏத்தாப் பிறவி இழிவு
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

430
கல்லை ஒத்தஎன் நெஞ்சினை உருக்கேன்
கடவுள் நின்அடி கண்டிட விழையேன்
அல்லை உத்தகோ தையர்க்குளங் குழைவேன்
அன்பி லாரொடும் அமர்ந்தவம் உழல்வேன்
தில்லை அப்பன்என் றுலகெடுத் தேத்தும்
சிவபி ரான்தருஞ் செல்வநின் தணிகை
எல்லை உற்றுனை ஏத்தின் றாடேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே