431
மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
ஐய நின்திரு அடித்துணை மறவா
அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
உடைய நாயகன் உதவிய பேறே
எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே

432
புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
விலையி லாதநின் திருவருள் விழையேன்
வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே

433
மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே

434
நச்சி லேபழ கியகருங் கண்ணால்
நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
சச்சி லேசிவன் அளித்திடும் மணியே
தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே

435
மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே