441
ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்றே
தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே

442
வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே

443
ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே

444
மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
அலைநீங்கின குழல்து஑ங்கின அகம்ஏங்கின அரைமேல்
கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே

445
மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே