446
செங்கன்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே

447
தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாயில் மீதில்
கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே

448
மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
பூவிழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே

449
வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே

திருச்சிற்றம்பலம்

 திருவருள் விலாசப் பத்து
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

450
ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே