451
கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
புத்தமுதே ஆனந்த போக மேஉள்
எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ

452
நின்னிருநாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்மால்
போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ

453
கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ

454
எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ

455
மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே