456
கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே

457
ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
நாயகனே வடிவேற்கை நாத னேநான்
கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே

458
கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
கால்ஊன்றி மயங்குகின்ற கடையே னேனைச்
சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
துணவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
சிற்பரசற் குருவாய்வத் தென்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே

459
பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
என்னிருகண் மணினேஎந் தாயே என்னை
ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே

திருச்சிற்றம்பலம்

 திருவருட் பேற்று விழைவு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

460
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே