461
புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
மிகுவான் முதலாம் பூதம்எலம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே

462
அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே

463
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயாநொடிப்பெல்லாம்
போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே

464
புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே

465
விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே