471
காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் துஎரில் திகழ்மதியே
தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

472
நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
செஞ்சாற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

473
முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

474
பித்தப் பெருமாள் சிவபெருமாள் பெரிய பெருமான் தனக்கருமைப்
பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே முவர்க் கருள்செய்தே
ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

475
ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
திரமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
சாதல் பிறத்தல் தவிர்த்தரளும் சரணாம் புயனே சத்தியனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே