476
வன்பில் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
அன்பிற் கிரங்கி விடமண்டோ ன் அருமை மகனே ஆரமுதே
அகிலம் படைத்தோன் காத்தோன்றின் றிழித்தோன் ஏத்த அளித்தோனே
துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
தணிகா சலமாந் தலைத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

477
மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
வேதப் பொருளே மதிச்சடைகேல் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

478
ஏதம் நிறுத்தம் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
வேதம் நிறுத்தும் நின்கமல மென்நாள் துணையே துணைஅல்லால்
வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
பொய்யர் அறியாப் பரவெளியே புரம்முன் றெரித்தோன் தரும்ஒளியே
சாதல் நிறுத்தும் அவருள்ளளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

479
முருகா எனநின் றேத்தாத முடரிடம்போய் மதிமயங்கி
முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
துடலும் நடுங்க விசிக்கல்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தறப்ரனே
தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

 செவி அறிவுறுத்தல்
கலி விருத்தம்
திருச்சிற்றம்பலம்

480
உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகுசிற் பரகுக என்று நீறிடில்
கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே