481
மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
தெருளுறு நீற்கனைச் சிவஎன் றுட்கொளில்
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே

482
வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
இல்வினைச் சண்முக என்று நீறிடில்
நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே

483
கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே

484
அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
இன்பறாச் சண்முக என்று நீறிடில்
துன்புறாத் தணிக்கதிச் சூழல் வாய்க்குமே

485
செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
மதிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே