486
மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
வறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
நெறிசிவ சண்முக என்று நீறிடில்
முறிகொளீஇ நின்றஉன் முடம் தீருமே

487
காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
நேயமாம் சண்முக என்று நீறிடில்
தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே

488
சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
நிதிசிவ சண்முக என்று நீறிடில்
வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே

489
பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
இசைசிவ சண்ம என்று நீறிடில்
திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே

திருச்சிற்றம்பலம்
 தேவ ஆசிரியம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

490
யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே