506
பனிப்புற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி

507
மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி

508
தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி

509
முவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
துஎவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி

510
விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
எண்ணுறும் அடியார் தங்கட் கினியதௌ; அமுதே போற்றி