511
மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி

512
தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
பொருகத் தகரை ஊர்ந்த புண்ணிய முர்த்தி போற்றி

513
சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தனித்தோய் போற்றி
செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி

514
முத்தியின் முதல்வ போற்றி முவிரு முகத்த போற்றி
சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி

515
தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி