571
நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே

572
இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே

573
தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ

574
அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
பொருளோர் இடத்தே மிடிகொண்டோ ர் புகுதல் இன்ற புதிதன்றே

575
புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான்
மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்படினும்
துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ
நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே