591
இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
அருள்ஆர் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
தெருள்ஆர் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ

592
உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே

593
எளியேன் இழைத்த பெரும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
ஒளியே முக்கட் செழுங்கரும்மே ஒன்றே அன்பர் உறவேநல்
அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே

594
காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
ஏமக் கொடுங்கற் றெனும்கரம் யாது செயுமோ என்செய்கேன்
நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே

595
எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
கண்ணார் துதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே