596
பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
தாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
மேலே அருள்கூர்ந் தெனைநின்தான் மேவு வோர்பால் சேர்த்தருளே

597
கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்
பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே

598
பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான்
ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ
கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே
மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே

599
இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான்
என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே
அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம்
பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே

600
வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே

திருச்சிற்றம்பலம்

 சிறு விண்ணப்பம் 
பொது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்