611
பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம் 
அனையஎன் பிழைபொ றுக்கவே

612
பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே

613
செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
கொல்லலும் தகும்எனைக் கொன்றி டர்தருள்
மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே

614
வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே

615
செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே

மேற்படி வேறு