616
இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
தில்லை மன்றில் சிவபரம் சோதியே
வல்லை யான்செயும் வஞ்சமே லாம்பொறுத்
தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே

மேற்படி வேறு
617
இல்லையே என்திங் கில்லை என்றருள்
நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே

618
உண்மையே அறிகிலா ஓதிய னேன்படும்
எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ

619
அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
மல்லலங் கடலிடை மகிழ்ந்து முழ்கினால்
கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே

620
மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ