621
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே

622
நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப்
புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே

திருச்சிற்றம்பலம்

 அச்சத் திரங்கல்
கோயில்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

623
துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
சுயம்பிர காசமே அமுதில்
கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
கடவுளே கண்ணுதற் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
கொடுந்துய ரால்அலைந் தையா
முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
முடன்என் றிகழ்வது முறையோ

624
இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
ஏன்றுகொள் பவரிலை அந்தோ
அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
செல்வமே சிவபரம் பொருளே

625
பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
புத்தமு தேகுணப் பொருப்பே
இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
இன்பமே என்பெருந் துணையே
அருள்எலாம் திரண்ட ஒருசிவ முர்த்தி
அண்ணலே நின்அடிக் கபயம்
மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
மயக்கெலாம் மாற்றிஆண் டருளே