626
ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
றணுத்துணைத் திவலையே எனினும்
ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
இல்லையேல் என்செய்கேன் எளியேன்
நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
நினைப்பரும் நிலைமையை அன்பர்
வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
விமலனே விடைப்பெரு மானே

627
பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
அருமையில் பிரமன் ஆகிய தேவர்
அடைந்தநற் செல்வமே அமுதே
இருமையிற் பயனும் நின்திரு அருளே
என்றுநின் அடைக்கலம் ஆனேன்
கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
களைகளைந் தெனைவிளைத் தருனே

628
விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
விருப்பினை நெருப்புறழ் துன்பின்
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
தனைஅன்றி அறிந்திலன் தமியேன்
கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
கிளர்தரும் சிற்பர சிவனே

629
சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
தேவனே தில்லைஅம் பலத்தே
தற்பர நடஞ்செய் தாணுவே அகில
சராசர காரணப் பொருளே
அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
அலைதரு கின்றனன் எளியேன்
கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
களிப்புடன் ஆடுவ தென்றோ

630
என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
என்றுநின் உருவுகண் டிடும்நாள்
என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
என்றென தகத்துயர் அறும்நாள்
மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
வானவர் கனவினும் தோன்றா
தோன்றறும் ஒன்றே அருண்மய மான
உத்தம வித்தக மணியே