631
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
அத்தக வேனை எடுப்பவர் நின்னை
அன்றிஎங் கணும்இலை ஐயா
மத்தகக் கரியின் உரிபுனை பவள
வண்ணனே விண்ணவர் அரசே
புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
பொருள்எலாம் புரிந்தருள் பவனே

632
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
வானமும் தேடினும் இன்றே
இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
இணைதுணை எனநினைந் துற்றேன்
மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
வாழிய அருட்பெருந் துறையே

திருச்சிற்றம்பலம்

 அபராதத் தாற்றாமை 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

633
துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மைஒன் றில்லா
எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனே எம்பசு பதியே
அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே

634
தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
தோகையர் மயக்கிடை அழுந்தி
ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
மாமணிக் குன்றமே மருந்தே
ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
யூர்வரும் என்னுடை உயிரே

635
கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
கடையனேன் விடையமே உடையேன்
இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
தெய்வமே தெய்வநா யாகமே
உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
ஒற்றியூர் வாழும்என் உவப்பே