636
இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
கண்ணுதல் உடையசெங் கனியே
தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
திருவொற்றி யூர்வரும் தேவே 

637
மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
மலரடி வழுத்திடச் சிறிதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
விடையில்வந் தருள்விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
காட்சியே ஒற்றியங் கரும்பே

638
முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
முடனேன் முழுப்புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
ஒட்டியே அன்பர் உனத்தெழும் களிப்பே
ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடையுடைக் கனியே
காலமும் கடந்தவர் கருத்தே

639
கருதென அடியார் காட்டியும் தேறாக்
கன்மனக் குரங்கனேன் உதவா
எருதென நின்றேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
மருதிடை நின்ற மாணிக்க மணியே
வன்பவம் தீர்ந்திடும் மருந்தே
ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
ஒற்றியூர் மேவும்என் உறவே

640
வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
வஞ்சனேன் நின்னடி யவர்பால்
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
கோலநெஞ் சொளிர்குணக் குன்றே
உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே