651
தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே

652
மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
வல்லி தாயம ருவிய நாதனே
புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே

திருச்சிற்றம்பலம்

 அருளியல் வினாவல் 
திருமுல்லைவாயில் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

653
தேன்என இனிக்கும் திருவருட் கடலே
தௌ;ளிய அமுதமே சிவமே
வான்என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
உன்திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ

654
பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
புத்தமு தேமறைப் பொருளே
வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
தீங்கொடி யாத வினையனேன் எனினும்
செல்வநின் கோயில்வந் தடைந்தால்
ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
ஏன்எனா திருப்பதும் இயல்போ

655
துப்புநேர் இதழி மகிழ்ந்தால் யாண
சுந்தரா சுந்தரன் து஑தா
மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
அறிவிலேன் எனினுநின் கோயிற்
கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
திருப்பதுன் திருவருட் கியல்போ