656
கங்கைஅஞ் சடைகொண் டோ ங்குசெங் கனியே
கண்கள்முன் றோங்குசெங் கரும்பே
மங்கல்இல் லாத வண்மையே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
எங்குவந் தாய்நீ யார்என வேனும்
இயம்பிடா திருப்பதும் இயல்போ

657
நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
நல்லவ னேதிருத் தில்லை
மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
திருப்பதுன் திருவருட் கியல்போ

658
பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
பத்தர்கட் கருள்செயும் பரமே
மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
பெருமநின் அருள்பெற லாம்என்
றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ

659
முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
முக்கணா முவர்க்கும் முதல்வா
மன்னிய கருணை வாரியே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
திருப்பதுன் திருவருட் கியல்போ

660
நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
ஞானநா டகம்புரி நலமே
வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
பொய்யல உலகறிந் ததுநீ
இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
இருப்பதுன் திருவருட் கியல்போ