661
பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
புண்ணியம் விளைகின்ற புலமே
மதுவினின் றோங்கும் பொழில்தரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
பூங்குழற் கன்புபூண் டவன்காண்
எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
இருப்பதுன் திருவருட் கியல்போ

662
பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
புண்ணியா கண்ணுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
உன்திரு அடித்துணை அறிய
என்னைஈன் றவனே முகமறி யார்போல்
இருப்பதுன் திருவருட் கியல்போ

திருச்சிற்றம்பலம்

 திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
கலிவிருத்தம்
திருசிற்றம்பலம்

663
தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே

664
தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
முல்லை வாயில் முதல்சிவ முர்த்தியே
தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே

665
வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே