666
மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே

667
சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே

668
சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ

669
வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெல்லாம்
நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ

670
மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே