671
தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ

672
தேக லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
மாசி லாமணி யேமருந் தேசற்றும்
கூசி டாமல்நின் கோயில்வத் துன்புகழ்
பேசி டாத பிழைபொறுத் தாள்வையே

திருச்சிற்றம்பலம்

 கொடைமடப் புகழ்ச்சி 
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

673
திரப்ப டுத்திரு மால்மயன் வாழ்த்தத்
தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

674
வெள்ளி மாமலை வீடென உடையீர்
விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
என்னில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
ஒன்னி யீர்உமை அன்றிஒன் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

675
கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
களிக்க வேபடிக் காசளித் தருளும்
வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே