676
அண்மை யாகும்சுந் தரர்க்கென்று கச்சூர்
ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
வாய்நி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ 
உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

677
சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
உந்தி வந்தவ னோடரி ஏத்த
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

678
கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

679
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
அடிய னேன்அலை கின்றதும் அழகோ
ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

680
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம்எ னக்கொளம் குணக்கடல் என்றே
மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே