681
பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

682
தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஒறி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே

திருச்சிற்றம்பலம்

திருவருள் வேட்கை 
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

683
மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ

684
தோன்றாத் துணையாரும் சோதியே நின்அடிக்கே
ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
ஊன்றார்த் ததித்தனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ

685
காதார் சுடுவிழியார் காமவலைக் குள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ