691
அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்னும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே

692
பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே

திருச்சிற்றம்பலம்

 அபராத விண்ணப்பம் 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

693
தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
முவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே

694
உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையலற் றவர்தம் மனத்தொளில் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே

695
கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே