716
உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
படைகொள் சூலப் படம்பக்க நாதரே
கடைகொள் நஞ்சுண்டு கண்டமிக றுத்தநீர்
இடையில் ஒற்றிவிட் டெங்கனம் சென்றிரோ

717
நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
பறைய நின்றப டம்பக்க நாதரே
உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ

718
வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
வணங்கு வார்க்கென்கொல் வாய்நிற வாததே

719
நாட நல்இசை நல்கிய முவர்தம்
பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ

720
கலவு காற்றனல் தூயமண் விண்புனல்
பலவு மாகும்ப டம்பக்க நாதரே
நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ