726
மைப்படியும் கண்ணார் மயில்உழக்கச் செய்வாயோ
கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
இப்படிஎன் றப்பபடிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே

727
நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே

728
தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே

729
மாறத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே

730
உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே