731
புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே

732
சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
கொங்குடைய கொன்றைக் குளிர்ச்சடையாய் கோதைஒரு
பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே

733
மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்தழும்என் கண்ணீர் துடைத்தருள
என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே

734
மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே

735
மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
பொன்வோல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே