736
பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்முடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

737
பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே

738
வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே

739
பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே

740
கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
ஒல்லைபடு கின்ற ஓறுவே தனைதனக்கோர்
எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே